Thursday, April 21, 2016

காட்டிலுள்ள ஆற்றில் ஒரு ஆமை வசித்து வந்தது. அதற்கு சற்று தூரத்திலுள்ள மரத்தில் சிலந்தி ஒன்று வசித்து வந்தது. ஆமையும், சிலந்தியும் ஒருநாள் சந்தித்துக் கொண்டன. அன்றிலிருந்து அவை நண்பர்களாக மாறின.
ஆமை சிலந்தியின் மீது உண்மையான நட்பு காட்டியது. ஆனால், சிலந்தியோ ஆமையின் மீது பாசாங்கான நட்பையே காட்டியது. மேலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆமையைக் கேலி செய்யும்.
""என்ன நண்பரே! உறங்கிக் கொண்டிருக்கும் போது உன் மீது யாரேனும் பானையைக் கவிழ்த்து வைத்து விட்டார்களோ?'' என்று ஆமையின் உருவத்தை சிலந்தி கேலி செய்யும்.
""என்ன செய்வது நண்பரே? கடவுள் என் உருவத்தை இவ்வாறு படைத்து விட்டார்!'' என்று நிதானமாகப் பதில் சொல்லும் ஆமை.
ஆமை மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தால், ""என்ன நண்பரே! என் பையன் பிறந்த உடனேயே சொன்னால்தான் நீ என் பையன் கல்யாணத்திற்கு வந்து சேர முடியும் போலிருக்கிறதே!'' என்று கேலி செய்யும் சிலந்தி.
ஆமையும், ""உன்னைப் போன்ற நண்பர்கள் கேலி செய்யாமல் யார் செய்வார்கள்?'' என்று பொறுமையாகப் பதில் சொல்லும்.
ஆமை இவ்வாறு நடந்து கொண்டாலும், சிலந்திக்கு ஆமையின் மீது காரணமற்ற பொறாமையும், வஞ்சகமும் வளர்த்து வந்தது.
ஒருநாள்-
சிலந்தி வஞ்சக எண்ணத்துடன் ஆமையைத் தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது.
""நண்பரே! அவசியம் நான் தரவிருக்கும் விருந்திற்கு நீ வரவேண்டும்! நான் உனக்காக அறுசுவை உணவு வகைகள் தயாரித்து வைப்பேன்! நீ வந்ததும் நாம் இருவரும் அவற்றை மகிழ்ச்சியாக உண்ணலாம்!'' என்று ஆசை வார்த்தை கூறியது. சிலந்தியின் வஞ்சக எண்ணத்தை அறியாத ஆமையும், சிலந்தியின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது.
விருந்து நாளும் வந்தது. சிலந்தி பல வகையான தின்பண்டங்களைத் தயாரித்து தட்டில் பரப்பி வைத்தது. ஆமையும் தான் வசிக்கும் ஆற்றிலிருந்து வெளியே வந்தது. விருந்திற்கான நேரம் வந்துவிட்டதால் அது அவசர அவசரமாக சிலந்தியின் வீட்டை வந்தடைந்தது.
""என்ன நண்பா? விருந்தை ஆரம்பிக்கலாமா?'' என்று கேட்டபடி சாப்பாட்டு மேசையின் முன்னே அமரச் சென்றது.
அப்போது வஞ்சக எண்ணம் கொண்ட சிலந்தி, ""நண்பரே! விருந்திற்கு வருவதென்றால் கை கால்களைக் கழுவிவிட்டு வரவேண்டாமா? பார். உன் கால்கள் எல்லாம் சேறாக இருக்கிறது. நீ போய் கால்களைக் கழுவி விட்டு வா! பிறகு விருந்தை ஆரம்பிக்கலாம்!'' என்று சொன்னது.
சிலந்தியின் பேச்சை ஆமையும் நம்பியது.
"கால்களைக் கழுவி சுத்தமாக வருவது தானே நண்பனுக்கு நாம் செய்யும் மரியாதை!' என்று நினைத்த ஆமையும், மீண்டும் ஆற்றங்கரையை நோக்கிச் சென்றது.
ஆனால், சிலந்தியோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல, ஆமை வருவதற்கு முன்பே தின்பண்டங்கள் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டது.
சிறிது நேரத்தில் ஆமை திரும்பி வந்தது. சாப்பாட்டு தட்டுக்கள் எல்லாம் உணவு எதுவும் இல்லாமல் காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
""என்ன நண்பா? உணவெல்லாம் எங்கே?'' என்று சிலந்தியிடம் கேட்டது ஆமை.
""நீ கால்களைக் கழுவிவிட்டு சீக்கிரம் வர வேண்டாமா? நீ வருவதற்குத் தாமதமானதால் நானே தின்பண்டங்களை உண்டு விட்டேன். உண்மையாகவே அருமையான உணவு. உனக்குத்தான் உண்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை!'' என்று நாக்கைச் சப்புக் கொட்டியது சிலந்தி.
நண்பனின் வஞ்சக எண்ணம் ஆமைக்குப் புரிந்தது. ஆனால், ஆமை அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""பரவாயில்லை நண்பரே! இன்று நாம் இருவரும் சேர்ந்து உண்ண இயலாமல் போய்விட்டது. நாளை நீ என் வீட்டிற்கு விருந்திற்கு வா... நான் சுவையான உணவு தயாரித்து வைக்கிறேன். நாம் இருவரும் இணைந்தே உண்டு மகிழலாம்!'' என்றது.
"இந்த ஆமை உண்மையிலேயே ஏமாளி தான்! நாளை ஆமை வீட்டிற்குச் சென்று மற்றொரு விருந்தை உண்டு மகிழலாம்!' என்று சிலந்தி மனதில் எண்ணிக் கொண்டது.
மறுநாள் ஆமை, குளத்தின் அடியிலிருந்த தன் வீட்டில் ஏராளமான உணவைச் சமைத்து வைத்தது.
விருந்திற்குப் புறப்பட்ட சிலந்திக்கு இப்போது வேறொரு எண்ணம் எழுந்தது. ஆற்றின் நீருக்கு அடியில் செல்வது எப்படி என்ற எண்ணம்தான் அது!
"என் உடலோ காற்று போல இருப்பதால் தண்ணீரில் மிதக்கவே செய்யும். தண்ணீருக்கு அடியில் செல்ல வேண்டும் என்றாலும் கனமான உடல் வேண்டும்?' என்று சிலந்தி எண்ணிக் கொண்டிருக்கும்போது அதற்கான வழி தோன்றியது.
சிலந்தி நிறைய பைகள் கொண்ட நல்ல மேலங்கி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டது. தன் மேலங்கியிலிருந்த பைகளில் நிறைய கூழாங்கற்களை எடுத்துப் போட்டது. இப்போது அதன் உடல் எடை அதிகமானது.
சிலந்தியும் ஆற்றிற்குச் சென்று தண்ணீரில் இறங்கியது. மேலங்கியிலுள்ள கற்களின் கனத்தால் சிலந்தியால் தண்ணீருக்குள் எளிதாக மூழ்க முடிந்தது.
சிலந்தி ஆமையின் வீட்டை அடைந்தது. ஆமை பல தட்டுக்களில் சுவையான உணவைப் பரிமாறி வைத்திருப்பதைப் பார்த்ததும் சிலந்தியின் நாக்கில் எச்சில் ஊறியது.
""என்ன ஆமை நண்பரே! விருந்தினைத் தொடங்கலாமா?'' என்று கேட்டது சிலந்தி.
""சற்று பொறுங்கள் நண்பரே! சாப்பிடும் போது மேலங்கியோடு சாப்பிடலாமா? அதனால் நீங்கள் உங்கள் மேலங்கியைக் கழற்றி வையுங்கள். பிறகு நாம் இருவரும் விருந்தை உண்ணலாம்,'' என்று சொன்னது ஆமை.
விதவிதமான உணவு வகைகளைக் கண்ட சிலந்தி, எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் மேலங்கியைக் கழற்றி, சுவரிலிருந்த ஓர் ஆணியில் மாட்டியது. மறு நொடியே சிலந்தி தண்ணீரிலிருந்து மேலேழும்பி, தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கத் தொடங்கியது.
மேலங்கியின் பையில் கற்களைப் போட்டிருந்ததால் அல்லவா சிலந்தி, தண்ணீருக்குள் மூழ்கி ஆமையின் வீட்டிற்குச் செல்ல முடிந்தது. இப்போது கற்களின் கனம் நீங்கி விட்டதால் சிலந்திக்கு மீண்டும் தண்ணீருக்குள் செல்ல முடியவில்லை.
முன்பு தன்னை விருந்துக்கு அழைத்து ஏமாற்றிய சிலந்தியை பதிலுக்கு அவமானம் செய்து அனுப்பிய ஆமையோ தான் சமைத்து வைத்திருந்த உணவு வகைகளைத் தான் மட்டுமே ரசித்து ருசித்து உண்டது.

ஏமாற்றாதே ஏமாறாதே!